அனுமன் முப்பது. குஞ்சரத்தான் துணை. அஞ்ச னைய ரும்பு தல்வன் ஆஞ்ச நேயன் பெற்றியை நெஞ்சி னிக்க துளசி தாசன் நறவி ணைத்து நல்கிட கொஞ்சம் யானும் கொஞ்சு தமிழில் கூற வெண்ணி அஞ்சியே கெஞ்சி நின்றி றைஞ்சு கின்றேன் குஞ்ச ரத்தான் தஞ்சமே. (அஞ்சனா தேவியின் அருமைப் புதல்வனாகிய ஆஞ்சநேயரின் சிறப்பை நமது நெஞ்சமெல்லாம் இனிக்குமாறு தேனொடு இணைத்து துளசிதாசன் நமக்கு (அனுமன் சாலிஸா மூலம்) தந்ததை நானும் கொஞ்சும் தமிழில் கூற எண்ணி பயபக்தியுடன் கெஞ்சி யானை முகத்தோனை வணங்கி தஞ்சம் அடைகின்றேன்!) ஃஃஃஃஃஃஃஃஃ 1. அண்ணலி ராமன் சீதை இலக்குவன் ஏத்து முந்தன் நுண்ணறி வரம்ீ தீரம் நற்குணம் பெற்றி பற்றி எண்ணரும் முனிவர் தேவர் ஈசனும் புலவர் கூற நண்ணில புலமை பக்தி நானதை நவில்வ தாமோ? (அண்ணல் இராமன், அன்னை சீதை, இளவல் இலக்குவன் ஆகியோர் போற்றும் உனது நுண்ணறிவு, வரம், ீ தீரம் எல்லா நற்குணங்களின் பெருமை பற்றி ஏற்கெனவே எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள், புலவர்கள், இறைவனார் எல்லோரும் கூறியுள்ளார்கள்! அத்தகைய பெருமைகளைப் பற்றி பக்தியோ புலமையோ இல்லாத நான் கூற முடியுமோ?) 2. தங்கமுன் மேனி யாகும் தரணியாள் வேந்து போலுன் அங்கமே தோற்றம்! இன்னும், அசைகுழை காதில் மின்னித் தொங்குமே! தலையில் நீண்ட சுழல்குழல்! திரண்ட தோளில் கொங்கலர் மாலை சூடும் கேசரி மைந்தன்! வாழி! (உன் உடலோ தங்கமாக மின்னும்; உன் உடல் அங்கங்களும் தோற்றமும் இவ்வுலகையாளும் அரசனைப்போலாகும்; மேலும், காதில் அசைகின்ற குழை மின்னிட, தலையில் நீண்டு சுருண்ட கூந்தல்தொங்கிட, திரண்ட தோளில் தேனூரும் மலர் மாலையை சூடிய மன்னன் கேசரியின் மைந்தனே! நீ வாழி!!) 3. ஆயிரம் கோடி ஐம்ப தடிகளுக் கப்பால் தோன்றும் ஞாயிறு வந்த காலை இளவெயில் செம்மை கண்டு காயிலை கனியே என்று கருதியே உண்ண எண்ணும் வாயுறு மைந்தன் உன்னை வணங்குதும் வாழி! வாழி!! (ஐம்பது ஆயிரம் கோடி அடிகளுக்கு அப்பால் காட்சி தரும் கதிரவன் தோன்றும் காலை இளவெயிலின் சிவந்த நிறங்கண்டு, 'இது காயல்ல, கனியே!' என்று கருதி அப் பகலவனை உண்ண எண்ணும் வாயை உடைய (வாயு பெற்ற) மைந்தனே! உன்னை வணங்குகிறேன்! நீ வாழ்க! வாழ்க!!) 4. ஆழ்கடல் அறிவும் குன்றா ஆண்மையும் குணமும் குன்றாய்ச் சூழ்கடல் தீவைத் தீவைத் தசுரரை அழித்த வரம்ீ தாழ்ந்தநற் பணிவி ராமன் தாள்தனில் பற்றும் பெற்று வாழ்ந்திடு வனும னெந்தாய்! வாழ்த்துதும் வாழி! வாழி!! (ஆழமான பரந்து விரிந்த கடல் போன்ற அறிவும், குறைவின்றி மிகுந்த ஆண்மையும், குன்று போன்ற நற்குணமும், கடல் சூழ்ந்த இலங்கை தீவைத் தீவைத்து அரக்கரை அழித்த வரமும்,ீ தாழ்ந்த நற்பணிவும், இராமன் திருப்பாதங்களின் மீ து பற்றும் கொண்டு வாழ்ந்திடும் எந்தை அனுமனே! நீ வாழ்க! வாழ்க! என வாழ்த்துகிறேன்!) 5. வாளுணும் இடியின் தண்டம் வெற்றியுண் கொடியின் கையன் தோளினில் தூய நூலும் தூளிபோல் துளசி தாமன் வாளியைத் தோளில் வைத்த வேளிரா மன்பொற் பூவின் தாளிணைத் தலையில் சூடும் தகையெழில் செப்ப லாமோ? (மின்னலுடன் கூடிய இடியினை ஒத்த கதாயுதத்தையும் வெற்றி தரும் கொடியினையும் கைகளிள் உடைய அனுமன், தோளில் தூய பூணூலையும், தொட்டில் போல் துளசி மாலையும் அணிந்த அனுமன், அம்புகளை தோளில் வைத்த வேள் இராமனின் பொன், பூ போன்ற திருவடிகளைத் தலையில் அணியும் பெருந்தகையுமான அனுமனின் பேரழகைப் பற்றி பேசுவது யாராலும் இயலாது!) 6. வில்லினி ராம தூதன் உயர்ந்தநல் லறிஞன் ஞானி சொல்லினில் செல்வ னன்பன் சோர்விலா தொண்டன் பக்தன் நல்லன நல்கு நண்பன் நல்லவ ரல்ல வர்க்கோ எல்லெனச் சுட்டெ ரிக்கும் எரியவ னனும னெந்தை! (வில்லுடைய இராமனின் தூதுவனாக சென்றவன், உயர்ந்த நல்லறிஞன், ஞானி, சொல்லின் செல்வன், அனைவரிடத்தும் அன்பு கொண்டவன், சோர்வின்றி இராமனுக்கு தொண்டு செய்பவன், இராம பக்தன், அனைவருக்கும் நல்லதே செய்யும் நண்பன், பொல்லாதவர்க்கு சூரியன் போல் சுட்டெரிக்கும் நெருப்புமாவான் எந்தை அனுமன்!) 7. ஆன்றநல் லறிவு கூர்ந்த ஆள்வினை உளமு வந்து தோன்றலி ராம னாணை தொண்டெனும் தூய உள்ளம் தான்றனித் தமிய னாகச் செய்திறன் வரீ தீரம் போன்றநற் குணத்தன் பெற்றி பூவுல கறியு மன்றே! (மாட்சிமை பட்ட நல்லறிவு, விடாமுயற்சி, தோன்றல் இராமனின் ஆணையே தொண்டு என்று எண்ணும் தூய உள்ளம், தான் ஒருவனாக எந்த ஒரு செயலையும் செய்யும் திறமை, வரம், ீ தீரம் போன்ற நற்குணங்களையுடைய அனுமனின் பெருமையை இப்பூவுலகம் அறியும்!) 8. ஆவி பேயு மஞ்சிடும் அனைத்து நோயும் நீங்கிடும்! தேவே உன்சீர் முழுவதும் தினமும் ஓதக் கேட்டதும்! மூவே ருலகு மதிர்ந்திடும் முனிந்து நீயொ லித்ததும்! நாவி லுண்மை நவிலுதும் நினக்கி லையே நிகரெதும்! (தெய்வத் தன்மையுடைய அனுமன் உனது பெருமைகளை யாரும் தினமும் படிப்பதைக் கேட்டதும் தங்களைச் சுற்றியிருக்கும் ஆவியும் பேயும் அஞ்சி ஓடிடும்! எல்லாவிதமான நோயும் தங்களை விட்டு நீங்கிடும்! நீ கோபமாக கர்ச்சனை செய்தால் மூவேறு உலகும் அதிர்ந்திடும்! உனக்கு நிகராக வேறில்லை என்று என் நாவினால் உண்மையை உரக்கச் சொல்கிறேன்!) 9. கணையா லசுர குலத்தினைக் களையு மண்ண லருளிய கணையா ழிதனைக் கவ்வியே கடுகி யாழி தாண்டியங் கணையா கற்பி னலைமக ளன்னை சீதை உய்யவே கணையா ழிதனைக் காட்டினை கனிவோ டெமையுங் காத்திடு! (அம்பினால் அரக்கர் குலத்தை அழித்த அண்ணல் இராமன் தந்தருளிய கணையாழியை கொண்டு, விரைந்து கடல் தாண்டி, அங்கே கற்பெனும் தீபம் அணையாது காத்து வரும் அலைமகள் அன்னை சீதை உயிருடன் வாழ கணையாழியைக் காட்டினாய்! அதுபோல, அன்புடன் எங்களையும் காத்திடு!) 10. ஆழியைத் தாவிச் சென்றே அசுரரை அழித்த வாறென் ஊழினை வென்று நோயும் இன்னலும் தொடர்ந்து வந்து சூழினும் துன்பம் செற்று செப்பரும் இன்பம் தாராய்! வாழிநின் பீடு! வாழி! வாழிநீ வாயு மைந்தா! (கடல் கடந்து அரக்கர்களை அழித்தவாறு எனைத்தொடரும் ஊழ்வினையை வென்று, நோயும் துன்பமும் தொடர்ந்து வந்து சூழ்ந்தாலும் அவற்றை அழித்துவிட்டு இன்பம் தருவாய்! உன் புகழ் வாழ்க! வாயு மைந்தனே! நீ வாழ்க! வாழ்க!) 11. சிறுவுரு வாகி தேவி சீதையின் முன்னந் தோன்றி ஒருபெரு உருவில் தீவை எரியினுக் கிரைம டுத்துச் செறுபவர் வென்று தேவர் செல்வனி ராமன் மெச்ச வருபவ னனும னெந்தை வாயுவின் மைந்த னன்றோ! (அசோக வனத்தில் மிகச்சிறிய உருவில் சீதாதேவியின்முன் தோன்றி, பின்பு மிகப்பெரிய உருவில் தோன்றி இலங்கைத் தீவைத் தீயினுக்கு இரையாக்கி, எதிர்த்துப் போர் புரிந்தவர்களை வென்று, தேவர்களும் செல்வன் இராமனும் பாராட்டும்படி வருகின்ற எந்தை அனுமன் வாயுவின் மைந்தன் அன்றோ!) 12. நெஞ்சு விம்மி யஞ்சி நின்ற வான ரப்ப டைதொழ சஞ்சீ வன்ம லைகொ ணர்ந்து தம்பி யாவி காத்ததும் நஞ்சி னாயி ரந்த லையின் நாக முன்சீ ரோதுமென் றஞ்ச னைய ரும்பு தல்வ னுன்னை யண்ணல் போற்றினன்! (போரில் இலக்குவன் இறந்தது கண்டு வருந்தி அழுது நெஞ்சு விம்மி அஞ்சி நின்ற வானரப்படை தொழுது நிற்க சஞ்சீவனி மலையை கொணர்ந்து தம்பி இலக்குவனின் உயிரை அனுமன் காத்ததும், "நஞ்சினையுடைய ஆயிரம் தலைகளைக் கொண்ட ஆதிசேஷன் நாகம் உன் புகழ்பாடும்" என்று அஞ்சனா தேவியின் அருமைமகனான உன்னை அண்ணல் இராமன் போற்றிப் புகழ்ந்தான்!) 13. தாயி னன்பு கொண்டி ராமன் தம்பி யாவி மீ ட்டதால் வாயு மைந்த னுன்னை நெஞ்சில் வாஞ்சை யோட ணைத்தனன் தேயி ராமன் வான ளாவத் தூய வன்பு கொண்டுனை நீயென் தம்பி பரதன் நேர்த்த னென்று கூறி வாழ்த்தினன்! (சஞ்சீவனி மலையை கொணர்ந்து தனது தம்பி உயிரை மீ ட்டதால், தாயின் அன்பு கொண்டு, வாயு மைந்தன் உன்னை அன்புடன் அணைத்துக் கொண்டான். தெய்வமாகிய இராமன், தூய அன்பு கொண்டு, உன்னை "நீ என் தம்பி பரதனுக்கு நிகரானவன்!" என்று கூறி வாழ்த்தினன்!) 14. குமுத வடியி ராமனின் பெயரைக் கல்லி லெழுதினை அமுத மேபோ லுயிர்தர அவைமி தந்த புணையென; எமது ளத்தில் நின்பெயர் எழுதி யான்மா உய்யவே அமல ன ீய ருள்புரி பிறவி யுவரி நீந்துவம்! தாமரை மலர் பாதங்களுடைய இராமன் பெயரைக் கல்லில் எழுதினை! அமுதுண்டவை போல் அவை உயிர் பெற்று மிதவையாகி கடலில் மிதந்தன! அதுபோலவே எங்கள் உள்ளங்களில் உன் பெயரை எழுதி எங்கள் ஆன்மாவும் பிழைத்திட (பரமாத்மாவுடன் இணைந்திட) தூயவனாய நீ அருள் புரிந்தால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்திடுவோம்!) 15. உனைத்துணை யாக ஏற்று வானர ரசுர கேளிர் பனைத்துணை பயனும் பெற்றார்! பெரிதென ஒன்றும் வேண்டேன்! அனைத்துனை யிரப்ப தெல்லாம் அண்ணலி னடியி லுன்பால் தினைத்துணை யிடமே எந்தாய்! தினமுனைத் தொழுது நின்றேன்! (உன்னைத் துணையாக ஏற்றுக் கொண்ட வானரர் (சுக்ரீவன்) அசுரர் (விபீஷனன்) பனையளவு பயனடைந்தனர் (அரசர்களாயினர்). நான் பெரிதாக ஒன்றும் கேட்கவில்லை. என் தந்தையாகிய உன்னை யாசித்து தினமும் தொழுது வேண்டுவதெல்லாம் அண்ணல் இராமனின் பாதங்களில் உன்னருகில் ஒரு சிறிய இடம் மட்டுமே!) 16. இடிவுணும் தண்ட னுந்தன் இணையடி யின்றே பற்றி முடிவினில் முக்தி பெற்று மூலவன் -- பிறப்ப றுக்கும் வடிவிலி ராமன் -- ஆளும் விண்ணுல கிற்கு வேறு வடிவினில் வந்த போதும் அரியவன் அடிய னாவேன்! (இடியை தன்னுள் வைத்த கதாயுதத்தை தாங்கிய உந்தன் திருவடிகளை இன்றே பற்றி, முடிவில் முக்தி பெற்று, பவப்பிணியை அழிக்கவல்ல அழகிய வில்லையுடைய மூலவன் இராமன் ஆளும் விண்ணுலகுக்கு (பிறவிப்பயனால்) நான் எந்த உருவில் சென்றாலும் அந்த ஹரியின் தொண்டனாகவே இருப்பேன்!) 17. உமையு முள்ளின் வேண்டிய வரமும் சித்தி கிட்டுமென் றுமையு முடலிற் பாதியாய் உடைய அரனும் ஒப்புவன்! நுமது சித்தி நிதிதமை ஈயும் வரமும் நும்மிடம் அமைய அன்னை தந்தனள் ஆக வேநா னும்சரண்! (ஒரு சிலரே சித்தியுடன் வரமும் தரவல்லர். அவர்களைப் போல் உம்மையும் மனதில் எண்ணிடின் வேண்டிய வரமும் சித்தியும் கிடைக்கும் என்று உமா தேவியையும் தனது உடலில் பாதியாய் உடைய சிவனார் ஒப்புக் கொண்டுள்ளார். நுமது அஷ்ட சித்தியையும் நவநிதியையும் பிறருக்கு தானமாகத்தரும் வரமும் நும்மிடம் அமைய அன்னை சீதை அருளினாள்! எனவே நான் உன்னைச் சரணடைந்தேன்!") 18. வளியின் மைந்தன் வேண்டிய வழங்கு வள்ளல் நல்லவர்க் கெளியன் அன்னார் உளமதில் உறைந்து தானும் தன்னுடை அளியுண் நெஞ்சில் உறைவிட மளித்து நோயும் துனிதுயர் துளியும் நண்ணா திருந்திடத் துணையு மாவன் அனுமனே! (வாயு மைந்தன் எல்லோர்க்கும் வேண்டியவற்றை வழங்கும் வள்ளல்; நல்லோர்க்கு எளியன்; அத்தகைய நல்லோர் உள்ளத்தில் வற்றிருந்து, ீ தானும் தன் கருணையுள்ள நெஞ்சில் தஞ்சம் அளித்து, அன்னார்க்கு யாதொரு நோயும், வறுமையும், துயரமும் சிறுதுளியும் நெருங்காது துணையாக இருப்பதும் அனுமனே!) 19. உடலுள பிணிபல ஒழிந்தெழு பிறவிநோய்க் கடலினைக் கடந்துநான் கரைசெல, விருப்பினை விட,வென துளத்துறை விடங்கொளு முனைத்தொழு திட,வெனும் திரிவர மருளொடு தருமினே! (இப்பிறவியில் உடலில் தோன்றும் அனைத்து நோயும் ஒழிந்து எழுபிறவி என்னும் நோயாகிய கடலையும் கடந்து நான் முக்தி என்னும் கரை செல்லவும், உலகின்மீ து கொண்ட பற்றினை விடவும், எனது உள்ளத்தில் வற்றிருக்கும் ீ உன்னைத் தொழுதிடவும், ஆகிய மூன்று வரங்களையும் நினது அருளோடு தந்திடு!) 20. வேறொரு தேவனைத் தொழுதிட வெனதுளம் மறுத்திடும் போதினும், வேறொரு தேவனென் துணைவர மறந்திடு வேளையும், வானர ஏறெனு மனுமனு னிணையடி யிறுகநான் பற்றினேன்; எண்ணிமேற் கூறின மூவரந் தந்திடு கொங்குசேர் முக்கனிச் சாறென! (உனையன்றி வேறெந்த ஒரு தேவனையும் தொழுதிட என்னுள்ளம் மறுத்திடும் போதிலும், வேறெந்த ஒரு தேவனும் எனக்குத் துணைவர மறந்திடும் வேளையும், எனக்கு எப்போதும் துணையாக இருக்கும் வானர ஏறெனும் அனுமன் உனது இணையடிகளை இறுகநான் பற்றினேன்! எண்ணி மேற்கூறின மூன்று வரங்களையும் உனது அருளெனும் தேன் கலந்த முக்கனிச் சாறாகத் தந்திடுக!) 21. அழிவுற தெவ்வர், மேன்மேல் அடுத்துறு பிறவி தந்த பழியுறு பாவ மெல்லாம் பொடியுற, பொருளை நல்கும் தொழிலினில் சிறந்து தோன்ற, தூயனாய் வாழ்ந்து நல்ல வழியினில் நடந்து செல்ல, வணங்குது மனும னுன்னை! (எதிரிகள் அழியவும், தொடர்ந்து வரும் பிறவியில் செய்த பழி பாவங்கள் பொடியாகவும், பொருள்தரும் தொழிலினில் சிறந்து விளங்கவும், தூயனாய் வாழ்ந்து நல்ல வழியினில் நடந்து செல்லவும் அனுமன் உன்னை வணங்குகிறேன்!) 22. தீயவர் தெவ்வர் தீவைத் தீயிடு நீயே தீயின் தூயவன், பணிவின் சொல்லன், துயரொடு துன்ப நோய்க்கு மாயவல் லரும ருந்தாய் அருள்தரு மீ ச னன்பில் தாயுவந் தறிவு ஞானந் தந்திடு தந்தை தானே! (தீயவர்களாகிய எதிரிகளின் தீவைத் தீயிடும் நீ தீயினும் தூயவன்! பணிவுடன் இனிய சொல்லினன்! துயரமும் துன்பமும் தரும் நோய்க்கும் ஆகிய வலிய அரிய மருந்துமாகி அருள் தரும் ஈசன்! அன்பு காட்டும் அன்னை! தானாய் விரும்பி வந்து நமக்கு அறிவும் ஞானமும் தந்திடும் தந்தையும் ஆவான்!) 23. மாதவ வேந்தி ராமன் வேண்டிய வாறு தீவின் தூதுவ னாக யேகித் தீவினை செற்று வந்தாய்! யாதொரு செயலை யானும் செவ்வனே செய்து வென்று தீதவந் தீர்த்து வாழ துணையிரு தினமு மெந்தாய்! (மாதவ மன்னன் இராமன் வேண்டியதற்கிணங்கி இலங்கை தீவுக்கு தூதுவனாகச் சென்று தீவினை அழித்து வந்தாய்! யானும் எந்த ஒரு செயலையும் செவ்வனே செய்து, வென்று, எவருக்கும் தீமையும் குற்றமும் செய்யாது வாழ்ந்திட தினமும் எமக்கு துணையாக இருப்பாய் எந்தையே!) 24. வேத மோதி ராம னாத வேளின் பாது கையொடு சாது சந்நி யாசி யில்லும் சென்று பாது காத்தநீ யேத மில்ல ருள்வ ழங்க வேது மில்லெ னாத்மனுக் கீ த லுந்தன் வேலை யன்றோ எந்தை தாய்நீ யெனக்கருள்! (வேதங்கள் ஓதுகின்ற இராமனாத வேளின் பாதுகைகளையும், சாது சந்நியாசிகளின் குடில்களுக்குச் சென்று அவர்களையும் பாதுகாத்த நீ, குற்றமற்ற அருளை வழங்க ஏதொரு துணையும் இல்லாத என் ஆத்மாவுக்கு ஈதல் உனது கடமையன்றோ? எனக்கு தந்தையும் தாயுமான நீயே எனக்கு அருள்வாயாக!) 25. எண்ணரும் வரீ தீரம் ஓதுமி ராம காதை உண்ணலு மின்றி காதுக் குணவுதந் துவந்து மாழ்கி அண்ணலி ராம னோடி லக்குவன் சீதை தம்மை உன்னுளே நெஞ்சில் வைத்த துலகெலா மறியு மன்றே! (இராமனின் வரம் ீ தீரம் பற்றி ஓதும் எண்ணற்ற கதைகளை வயிற்றுக்கு உண்ணாமல் தொடர்ந்து காதுகளுக்கு மட்டுமே உணவு தந்து மகிழ்ந்து மயங்கி அண்ணல் இராமனோடு இலக்குவன் சீதை ஆகியோரை உன்னுளே இதயத்தில் வைத்துக் கொண்டதை இந்த உலகமே அறியுமல்லவா!) 26. வெண்ணெ யாடை துளசி மாலை வடைவெற் றிலையி னாரமு முண்ணத் தயிரி னன்னம் யாவு முனக்கு தருதும் நீயென தெண்ணம் சொல்லும் செய்கை யாலும் தோன்று துன்பம் நீக்கிநின் அண்ண லன்னை இலக்கு வன்ற னோடென் னுள்ளத் துறைந்தருள்! (வெண்ணெய் ஆடை, துளசி மாலை, வடை மாலை, வெற்றிலை ஆரம் இவற்றுடன், நீ உண்ணத் தயிரின் அன்னம் யாவும் உனக்கு தருகிறேன்! நீ எனது அறியாமையால் விளையும் தவறான எண்ணம், சொல், செய்கையினால் எனக்கோ அல்லது பிறருக்கோ தோன்றுகிற துன்பத்தை நீக்கி, நின் உள்ளத்தில் வாழும் அண்ணல் இராமன், அன்னை சீதை, தம்பி இலக்குவன் ஆகியோருடன் என் உள்ளத்துள் வாழ்ந்து அருள்!) 27. அண்ணலை யடைய வேண்டி னனுமனு னாணை வேண்டு மண்ணலை யடைய நீயே அருள்புரிந் தருள வேண்டு முன்னுள மிரங்கு மட்டு மென்னுளத் தாளு முன்னை யுன்னுளத் திராம னோடே யென்னுளச் சிறையி லிட்டேன்! (அண்ணல் இராமனைச் சென்றடைய வேண்டின் அனுமன் உன் ஆணை வேண்டும்; அதற்கு நீயே அருள் புரிய வேண்டும்! உன்னுளம் இரக்கம் காட்டும் வரை என் உள்ளத்தில் வற்றிருந்து ீ என்னை ஆட்சி செய்யும் உன்னை உனது உள்ளத்தில் உறையும் இராமனோடு என் உள்ளச் சிறையிலிட்டேன்!) 28. கரியவ னாயன் கண்ணன்; கயிலயின் தேவி தாய்சங் கரியவ ளின்த மையன்; காத்திட வேண்டு மன்பர்க் கரியவன் அல்லன்; அந்த யிறைவன னைத்து தேவர்க் கரி;யவ னேயி ராமன் அனுமனின் உள்ளத் துள்ளான்! (ஆயர்குடியில் பிறந்த கண்ணன் கரியவன்! கயிலையின் தேவி அன்னை சங்கரியின் தமையன்! தம்மை காத்திட வணங்கி வேண்டிடும் அன்பர்க்கு அரிதானவன் அல்லன்! அத்தகைய இறைவன் அனைத்து தேவர்களுக்கும் 'அரி' யாவான்! அவனே அனுமனின் உள்ளத்தின் உள்ளே உள்ள இராமன்!) 29. பயமே லுறைவோன் பதமலர் பணிவோர்க் கிலையே பிறப்பிறப் பயமே யவன்றா ளடியுற வனுமன் துணையே அவன்நல பயமே பயந்து பரவுல கின்பப் பேறுந் தந்திட, பயமே னினிநின் சரணெனப் பற்றற் றானைப் பற்றுவன்! (பாற்கடலில் பள்ளி கொண்ட அந்த பரமாத்மாவின் பாத மலர்களைப் பற்றிப் பணிவோர்க்கு பிறப்பு இறப்பு என்று ஒன்றில்லை! நமது ஆத்மா (அயம்) அவன் பாதங்களின் அடியைஅடைய அனுமனே துணை! அவன் நமக்கு நல்அபயம் தந்து பரலோகத்தில் இன்பப் பேறும் தந்திடும் போது இனி பயமேன்? "நின் சரண்" என்று பற்றற்ற அனுமனைப் பற்றுவேன்!) 30. செப்புதல் துயர கற்றும்! செல்வம னைத்துஞ் சேர்க்கும்! பொற்பத வனுமன் பெற்றி போற்றியே புகன்ற பாடல் முப்பதி லொன்றை யேனும் முழுமன தொன்றி நின்று தப்பெது வேது மின்றி தினமொரு முறையு மாயின்! (பொற்பாதங்களையுடைய அனுமன் புகழைப் போற்றி மேற்கூறிய முப்பது பாடல்களில் ஒன்றையேனும் முழுமனதாய் ஒன்றி நின்று ஒரு பிழையுமின்றி தினம் ஒரு முறையாவது சொல்லி வந்தால் அது நமது எல்லா துயரங்களையும் அகற்றும்! எல்லாவிதமான செல்வங்களையும் நமக்குத் தரும்!) ****************** வனமனை விநல்வினை யெனமன மெணுமுனை முனைவினைப் பிணிநணியே! தனமனைத் தினியென தினிதென யெணியநீ துணையிணைத் தணைத்தனையே!! வனமனை மனதினில் சினமெனு மனலினை வனைந்துநீ யுணங்கினையே! அனுமனை மனதினி லனுதினம் நினைந்தினி யுணர்ந்தனை புணையெனவே! (முற்பிறப்பின் வினையாகிய நோய் உன்னைத் தொடர்ந்து இப்பிறவியில் இணைந்து இருப்பதால், "சென்ற பிறவியின் நற்பயனாக இப்பிறப்பில் அழகிய மனைவியைப் பெற்றேன்" என்று உன் மனம் (சிற்றின்பம் பற்றி மட்டுமே) எண்ணுகின்றது! "செல்வங்கள் அனைத்தும் இனி எனது, இனிது" என எண்ணிய நீ, அவற்றை துணையாக இணைத்து அணைத்துக்கொண்டாய்! காடு போன்ற மனதில் சினம் என்னும் நெருப்பை உண்டாக்கி காய்ந்து கருகிப் போய் விட்டாய்! அனுமனை மனதில் அனுதினம் நினைத்து இனியாவது இப்பிறவிக் கடலில் மூழ்கிடாது பாதுகாப்பாகக் கடந்திட அனுமனே தகுந்த மிதவையென உணர்ந்து அவனைப் பற்றிக் கொண்டாய்!) துளசி யார மணிந்தவன் தூய வனுமன் சீரினைத் துளசி தாசின் கவித்துவம் தெய்வ பக்தி யிற்சிறு துளியு மில்லாச் சிறியநான் தேரா தேசெய் தவறெனி னெளிய னென்னை யாவரு மிறைஞ்சு கின்றேன் பொறுமினே! (துளசி மாலை அணிந்த -- மனம், மொழி, செயல் ஆகியவற்றால் -- தூய அனுமனின் பெருமைகளைப் பற்றிக் கூறிட துளசிதாஸின் கவித்திறனோ தெய்வ பக்தியோ சிறுதுளியும் பெற்றிடாத சிறியவனாகிய நான் செய்த இம்முயற்சியை சிறிதும் ஆராயாமல் செய்த பெரும் தவறு என்று கருதினால், எளியனாகிய என்னை அனைவரும் மன்னித்து, பொறுத்தருள வேண்டுகிறேன்!) ******************
Enter the password to open this PDF file:
-
-
-
-
-
-
-
-
-
-
-
-